ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈபிவி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி இந்தியன்- 2 படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தபோது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனையடுத்து நசரத்பேட்டை போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைது செய்தனர்.
மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இச்சம்பவம் குறித்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. படபிடிப்பு விபத்து வழக்கை நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்